தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்

Iranaimadhu 21
Iranaimadhu 21

கிளிநொச்சி இரணைமடு விமானப்படை கொரோனா கண்காணிப்பு நிலையத்திலிருந்து 67 பேர் வெளியேறினர். கடந்த 11.08.2020 அன்று இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய 69பேர் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

14 நாட்கள் நிறைவு செய்துள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முடிந்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட 67 பேர் இன்று அவர்களின் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட 69 பேரில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது  பி.சி.ஆர்  பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கடந்த வாரமளவில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொற்று உறுதி செய்யப்படாத மிகுதி 67 பேரையும் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரணைமடு விமானப்படை பதில் கடமை கட்டளை அதிகாரி மஞ்சுள வீரசிங்க ( Act.CO manjula weerasinga) தெரிவித்துள்ளார். 

குறித்த 67 பேரில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிற்கான மருத்துவ சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நபர்கள் தொழில் மற்றும் மேலதிக கல்விக்காக இந்தோனேசியாவிற்கு சென்றிருந்த நிலையில் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இரணைமடு விமானப்படை முகாமில் 5 பிரிவுகளாக தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்களில் இதுவரை 726 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகள் முடித்து வெளியேறியுள்ளனர் என்பது விசேட அம்சமாகும்.

Iranaimadhu 19 2
Iranaimadhu 24
Iranaimadhu 23
Iranaimadhu 25
Iranaimadhu 2