அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை – சஜித்

sajith 2 1
sajith 2 1

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் நேற்று (Oct.22) அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இளைஞர்கள், தொழில்சார் நிபுணர்கள், வர்த்தக பிரமுகர்கள், மகளிர் சங்க பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர். இவர்கள் சமூகம் சார்பான தங்களது கேள்விகளை கேட்டபோது, சஜித் பிரேமதாச உரிய பதில்களை வழங்கினார்.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாட்டிலுள்ள சகல இனங்களினதும் மதங்களினதும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கான பதில்களை வழங்குகையில்

எமது நாட்டில் எந்தவொரு இனத்தவருக்கோ அல்லது மதத்தினருக்கோ அடிப்படைவாதத்தில் செயற்பட இடமளிக்க மாட்டேன் என்பதை விசேடமாக கூறவிரும்புகின்றேன். இனவாதம், மதவாதம் கடைப்பிடிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்போது சகல இனத்தவர்களும் பாரபட்சமற்ற முறையில் பாதுகாக்கப்படுவார்கள். முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவ அதில் ஓர் அங்கமாகும். அதேபோல் பொருளாதார பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு என்பனவும் உள்ளடங்கும்.

நான் ஒரு சிறந்த சிங்கள பௌத்தர். புத்தரின் கோட்பாட்டின் பிரகாரம் சகல உயிரினங்களும் துன்பமில்லாமல் வாழவேண்டும். எந்தவொரு இன பேதத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன். எனவே, இதனடிப்படையில் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் பூரண பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

எமது நாட்டிலுள்ள மதம் மற்றும் சமயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏனைய மதங்களையும் இனங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்காள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மதங்களும் தனித்தனி கலாசாரத்தைக் கொண்டவை. அவற்றில் நாம் தலையீடு செய்யப் போவதில்லை.

இந்துக்கள் கோவில்களில் எவ்வாறு வழிபட வேண்டும், முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் எவ்வாறு வழிபட வேண்டும், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் எவ்வாறு வழிபட வேண்டுமென்று நாம் கூறவேண்டிய அவசியமில்லை. அதேபோல் பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று அவர்கள் எவ்வாறு வணக்க வழிபாடுகளை செய்யவேண்டும் என்று எவராலும் ஆலோசனை கூறமுடியாது.

எனவே, அவை எல்லா மதங்களின் சம்பிரதாயங்களையும் பாதுகாப்பது எனது கடமை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பௌத்த மதம் கூறியுள்ள பிரகாரம் நாம் ஏனைய சமயங்களுக்கும் இடமளிக்க வேண்டும். நாங்கள் பௌத்த சமயம் கூறும் பிரகாரத்தின் படியே செயற்பட விரும்புகிறோம். அதேவேளை, பௌத்த மதத்தை திரிபுபடுத்துபவர்கள் தொடர்பில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு முக்கியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிமா, இந்துவா, பௌத்தரா, கிறிஸ்தவரா என்பது முக்கியமல்ல. அவர்களின் காணி உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதுதான் என்னுடைய கொள்கையாகும்.

அனைத்து இனங்களையும் கருத்திற்கொண்டு, யாரையும் பாதிக்காத வகையில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்வேன். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கே முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். வளங்கள் நீடித்து நிலைபெறும் செயற்பாட்டுக்கு கவனம் செலுத்துவேன்.

அத்துடன் பாராளுமன்றத் தேர்தலை நடாத்திவிட்டுத்தான் நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.