சீரற்ற காலநிலை தொடரும்!

07a3a081198e929142e465518d57575f XL
07a3a081198e929142e465518d57575f XL

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நிலவும் மழை,காற்று இடியுடன் கூடியசீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பல பிரதேசங்கள் கடும் காற்று, வெள்ளம் மற்றும் மின்னல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்று, மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் தொடருமென தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், கிழக்கு, வடமேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படுமென்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேல், வடமேல்,தென் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகுமென்றும் வடமத்திய மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பெய்யுமென்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுமென்றும் இத்தகைய இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படவேண்டுமென்றும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை,நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கத்தினால் 43 வயதுடைய பெண் ஒருவர் மின்னேரிய ஜயந்திபுர பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில் இப் பெண் உட்பட இருவருக்கு மின்னல் தாக்கத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு நபர் காயங்களுக்குள்ளாகி பொலனறுவை அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.

வவுனியா பிரதேசத்தில் வீசிய கடும் காற்று மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இரு மத வழிபாட்டுத் தலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதிகளிலும் வீட்டு வளவுகளிலும் இருந்த பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இதனால் 30 குடும்பங்கள் வரையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.