இயற்கை அனர்த்தத்தால் 197 வீடுகள் சேதம்!

2

நாடு முழுவதும் நீடித்த சீரற்ற காலநிலையினால் மழை மற்றும் மண்சரிவினால் 210 குடும்பங்களைச் சேர்ந்த 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களிற்கான மண் சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழுப்பு, இரத்னபுரி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை (நிலை 1) விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பாதுக, சீதாவக்க பகுதிகளில் அதிக ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஆறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் 210 குடும்பங்களைச் சேர்ந்த 633 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 197 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன.

இன்று பிற்பகல் வரை மழை தொடர்ந்தால், மக்கள் விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நிலச்சரிவின் அறிகுறிகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தரையில் அல்லது தரை அல்லது சுவர் கட்டிடங்களில் புதிய விரிசல்களைக் காண்டால், திடீரென மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்ந்தால் எச்சரிக்கையடைந்து உரிய அதிகாரிகளிற்கு அறிவிக்க வேண்டும். புதிய நீரூற்று அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் இந்த இடங்களிலிருந்து பாதுகாப்பான மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்தார்.

நேற்று (புதன்கிழமை) அதிக மழைவீழ்ச்சி கொழும்பில் சலாவ எஸ்டேட் பகுதியில் பதிவானது. அங்கு 287 மி.மீ மழைவீழ்ச்சி பதிவானது.

இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளானவர்களிற்கு உதவ 117 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.