ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர்; கிராம மீனவர்களுடனான மக்கள் சந்திப்பு

01 2

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் வாழைச்சேனை நாசீவன்தீவு கிராம மீனவர்களுடனான மக்கள் சந்திப்பு கிராமத்தில் இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கல்குடா தொகுதி இணைப்பாளர் எஸ்.சிவா, நாசிவன்தீவு கிராம இணைப்பாளர் எஸ்.மூர்த்தி, மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், மீனவர்களுக்காக அரசு வழங்கும் உதவிகள் எவையும் இதுவரை தமது கிராம மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. அத்தோடு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஒரு சிலர் மீன்பிடியில் ஈடுபடுவதால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதுபற்றி அரச அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றும் கூறினர்.

மேலும் 250இற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற போதிலும் இன்று வரையில் தமக்கு வீட்டுத் திட்டம் தரப்படவில்லை என்றும், அத்தோடு மிகவும் வறிய நிலையிலுள்ள தமக்கு மீன்பிடி படகு, வலை என்பவற்றை இலவசமாக பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் போக்குவரத்து செய்வது பெரும் சிரமமாக இருப்பதால் நாசிவன்தீவு வாழைச்சேனை வீதியை புனரமைத்து மழை கால போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் செப்பனிட்டு தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட விரோத வலைப் பாவனை உடனே நிறுத்தப்படும், அத்தோடு எமது கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வீட்டுத் திட்டம், இலவச படகு வலை, வீதிப் பிரச்சினை மற்றும் மீனவருக்கான ஏனைய அரச உதவிகள் போன்ற அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வுகள் விரைவாக பெற்றுத்தரப்படுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்தார்.

எமது கட்சியானது இணக்க அரசியலூடாக மக்களுக்கான அடிப்படை, அன்றாட மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவரும் ஒரு கட்சியாகும். எனவே தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு மக்கள் அதிக ஆதரவை வழங்கி கட்சியை பலப்படுத்த வேண்டுமென மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா கோரிக்கை விடுத்தார்.