ராஜபக்‌ஷ வந்தால் சமஷ்டி, ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒற்றையாட்சியா?

2269cdb0 af5a 4c75 8800 a17633988922
2269cdb0 af5a 4c75 8800 a17633988922

ராஜபக்சவினர் ஆட்சிக்கு வந்தால் சமஸ்டி, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒற்றையாட்சியா? இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தனத்தையே காட்டுகின்றது என இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துகளை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து முன்வைத்துள்ள 13 கோரிக்கைகளில் தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை தவிர்த்து ஏனைய விடயங்களை முதன்மைப் படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் தென்னிலங்கை தரப்புக்களுடன் பேசக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கும். அதனை விடுத்து தற்போது நடைமுறை சாத்தியமற்ற விடயங்கள் சில உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் இந்த கோரிக்கைகளை தென்னிலங்கையில் உள்ள கோத்தபாய,சஜித் தரப்புகள் நிராகரித்துள்ளன. அவர்கள் மட்டுமல்லாது ஜே.வி.பி.யினர் கூட இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களில் அக்கறை கொண்டிருப்பார்களே ஆயின் நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்வைத்து பேரம் பேசியிருப்பார்கள். தற்போது நடைமுறைக்கு சாத்தியமற்ற சிக்கலான விடயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என கேட்டால் தென்னிலங்கையில் உள்ள எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாடார்கள். ஏனெனில் அவர்கள் தென்னிலங்கை மக்களின் வாக்குகள் விடயத்தில் மிகுந்த கவனமாக இருப்பார்கள்.

கோரிக்கையின் வடிவம் தென்னிலங்கையில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என இந்த தரப்புக்களே கூறுவதை
அவதானிக்க முடிகின்றது. இப்போது சிலவற்றை நீக்கிவிட்டு பேசலாம் என்றும் கருத்துக்கள் வரத்தொடங்கியுள்ளன. அப்படியானால் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் பொருத்தமில்லாத விடயங்களை முன்வைத்து பலனில்லை. இதனால் சாத்தியாக்க கூடிய விடயங்கள் கூட பின்னோக்கி நகரும். இவைதான் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளது.

தமிழ் கட்சிகள் சில இணைந்து முன்வைத்த கோரிக்கைகள் தென்னிலங்கையில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. பேசுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு, அவ்வாறு பேச்சுவார்த்தை இடம்பெற்றாலும் முழுமையாக இவை ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. எனவே இவர்கள் தேர்தலில் அடுத்து மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். தென்னிலங்கையில் போட்டியிடும் தரப்புக்கள் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கோரப்போகின்றனரா? அல்லது கோரிகைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழர்களின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிளிங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கப் போகின்றனரா? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் சாத்தியமற்ற விடயங்களை முவைத்துவிட்டு வேட்பாளர்களுடனும் பேச முடியாமல் ஆப்பிழுத்த குரங்குகள் போல சிக்கி தவிக்கின்றனர். இந்த ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளும் இந்த கோரிக்கைகளை விட்டுவிட்டு யதார்த்த பூர்வமாக யார் சில விடயங்களை செய்து முடிப்பாரோ அவருக்கு ஆதரவினை வழங்க முன்வரவேண்டும்.

அந்தவகையில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அந்த துணிவு இருக்கின்றது. அவர் ஆட்சிக்கு வந்ததும் நாம் அதனை செய்விப்போம். இத்தனை நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூட்டமைப்பு முண்டு கொடுத்து வந்தது. அப்போதைய காலத்தில் ஏன் இந்த கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைக்கவில்லை.

ராஜபக்சவினர் ஆட்சிக்கு வந்தால் சமஸ்டி ஐக்கிய தேசியக் கட்சி வந்தால் ஒற்றையாட்சியா? இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தனத்தையே காட்டுகின்றது என்றார்.