எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் பணியாற்ற வாருங்கள்; பிரதமர்

97814047 10156773994801467 8231857563600158720 n 2
97814047 10156773994801467 8231857563600158720 n 2

எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்களிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் .

புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார் .

இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் மேலும் பிரதமர் கருத்து வெளியிடுகையில்,

கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகை தந்த புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால் நீங்கள் பலர் நாட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து வெளியேறியுள்ளது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

எமது அரசு உங்களிற்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன் உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால் நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தலாம்.

குளிர் – பனி என்று பாராமல் உங்களை வருத்தி நீங்கள் உழைக்கும் பணத்தை உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு எமது அரசு என்றும் உங்களிற்கு பக்க பலமாக செயற்படும்.

எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன் மடங்கு அழகிய மற்றும் வளம் செழிக்கும் உலகமே திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து பயணிப்போம் என மேலும் புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .