வடக்கு சுகாதார அமைச்சுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

pannai
pannai

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் (சுகாதாரக் கிராமம்) காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று திங்கட்கிழமை இரவு தீ மூட்டியுள்ளனர்.

அதனால் பிளாஸ்ரிக் போத்தல்கள் எரிந்தும் , மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.

அதனை அடுத்து அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கும் அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க முற்பட்ட போது அவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் மத்தியிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆர். கேதீஸ்வரனை கேட்ட போது, “வளாகத்தில் மருந்து பொருட்களை எரியூட்டி அழிக்க அனுமதிக்கவில்லை. அவற்றை உரிய முறையில் எரியூட்டி அழிக்க உரிய இடத்திற்கு அனுப்பி வைக்குமாறே பணிக்கப்பட்டது. அந்த நிலையில் மருந்தாளர் ஒருவரின் எதேச்சைகரமான முடிவினால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிராந்திய மருத்துவ அதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவர்கள் நிலமை தொடர்பில் அவதானித்தத்துடன், உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும் தாம் உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரியும் பண்ணைக் கிராம மக்கள், இன்று காலை மாகாண சுகாதார அமைச்சின் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.