வறிய மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க உதவி!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் (LIFT) அமைப்பினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்வு கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன், நிதிப் பணிப்பாளர் திருமதி.சுதர்சினி சுபாஸ்கரன், திட்ட உத்தியோகத்தர் வி.தயாநிதி, கள உத்தியோகத்தர் வெ.சரோனா, பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நாசீவந்தீவு சிவ வித்தியாலயத்திற்கு 52 சீருடைகளும், வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 44 சீருடைகளும், திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 50 சீருடைகளும், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு 29 சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.