மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராம மக்கள் போராட்டம்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராம மக்கள் இன்றைய தினம் (28) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரச அதிகாரிகள் சன்னார் பகுதியில் உள்ள அரச காணிகளை தனியாருக்கு உரிய அனுமதிப்பத்திரம் இன்றி வழங்குவதாக கூறியும், குறித்த காணி வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி குறித்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

சன்னார் கிராமத்தில் தாங்கள் குடியேற்றம் செய்யப்பட்டு பல வருடங்களை கடக்கின்ற போதும் தமது குடியேற்றத்திற்கு ½ ஏக்கர் காணி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. தமக்கு விவசாய காணி வழங்கப்படவில்லை. நாங்கள் குடியேற்றம் செய்யப்பட்ட போது 2 ஏக்கர் விவசாய காணி தருவதாக அதிகாரிகள் கூறிய போதும் இன்று வரை விவசாய காணி வழங்கப்படவில்லை.

ஆனால், அரச அதிகாரிகள் வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கும் வேறு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பல ஏக்கர் காணிகளை காடு அழித்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கி வருகின்றனர்.

குறித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த கோரி சன்னார் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது காணி பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுனருடன் உரையாடி அதன் விடையங்கள் தொடர்பாக மக்களிடம் தெரியப்படுத்தினார்.

குறிப்பாக அரச காணிகளை மக்களுக்கு விவசாய செய்கைக்கு பகிர்ந்து வழங்குமாறும், தானியாருக்கான காணிகள் காணப்பட்டால் உறுதி பத்திரத்தின் அடிப்படையில் தனியாருக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுனர் பிரதேசச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்ற தகவலை பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

இந்த நிலையில் போராட்டம் இடம் பெற்ற பகுதிக்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் காணி துப்பரவு செய்யும் பணியை தற்காலிகமாக இடை நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்றனர்.