தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை- நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பு

vlcsnap 2020 09 29 13h47m46s400
vlcsnap 2020 09 29 13h47m46s400

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் நலன் புரிச் சங்கத்தினர் கூடி ஆராய்ந்து இது தொடர்பில் எதிர்ப்பினை வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பா.சுரேஷ் குமார் தெரிவித்தார்

கடந்த காலத்தில் மிகவும் நடைபவனி மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு புற்று நோய் வைத்தியசாலை ஆகிய தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் மத்திய அரசாங்கத்தின் கீழ் செல்லும்போது இங்கே பல நிர்வாக சிக்கல்கள் தோன்றுவதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. ஏற்கனவே பல வசதிகளைக் கொண்ட மாபெரும் வைத்தியசாலையாக வளர்ந்து வரும் புற்றுநோய் வைத்தியசாலையை தற்போதைய நிலையில் நோயாளர்கள் வழமை போன்று தமது சிகிச்சையினை பெற்றுக் கொள்கின்றனர்.

இதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்லும்போது பல இடர்பாடுகளை நிர்வாக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றினையும் தாங்கள் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.