யாழ்ப்பாணம் – தமிழகம் இடையிலான விமான சேவைகள் நவம்பர் 10இல் ஆரம்பம்

fitsair
fitsair

சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகள், எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து ஐஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், எச்.எம்.சி.நிமலசிறி,

“அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைய விமான சேவைகள் ஆரம்பமாகும். பகல் நேர விமான சேவை மாத்திரம் இடம்பெறும் என அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான ஒருவழி விமானப் பயணக் கட்டணமாக, 15 ஆயிரத்து 690 ரூபாவும், சென்னை-யாழ்ப்பாணத்துக்கான ஒரு வழி விமான கட்டணமாக, 7 ஆயிரத்து 879 ரூபாவும் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயண நேரம் 32 தொடக்கம் 50 நிமிடங்களாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விமானப் பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை குறித்த விமான நிறுவனங்களின் இணையத்தளங்களின் மூலமாகவும், முகவர்கள் மூலமாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயார் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளது.

நவம்பர் 10ஆம் திகதியில் இருந்து திருச்சி- யாழ்ப்பாணம் இடையே இந்த விமான சேவை, வாரத்தில் மூன்று நாள்கள் இடம்பெறவுள்ளதாக, பிட்ஸ் எயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னர் எக்ஸ்போ எயர் என்ற பெயரில், அழைக்கப்பட்ட இந்த நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகளையும், வெளிநாட்டு சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகளையும் நடத்தி வருகிறது.

முதல் முறையாக திருச்சி – யாழ்ப்பாணம் இடையில் வெளிநாட்டு விமான சேவையை இந்த நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

யாழ்ப்பாணம் – கொழும்பு இரத்மலானை விமான சேவைக்கு ஒரு வழிப் பயணத்துக்கு 7 ஆயிரம் ரூபாவிலிருந்து கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் பிட்ஸ் எயார் தெரிவித்துள்ளது.