ஆக்கிரமிப்புக்குள்ளாகிவரும் குருந்தூர்மலையில் கிராம மக்களால் வழிபாடு!

image 50590209 1
image 50590209 1

தொல்லியல் திணைக்களத்தால் பௌத்த மயமாக்கல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களின் புராதன வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர் மலை ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்களால் இன்றையதினம் (01) சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் விகாரை ஒன்று இருந்தது என தெரிவித்து தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தி விகாரை ஒன்றினை அமைக்க பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 2018 ஆம் ஆண்டு முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பினால் அது கைகூடாத நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்று கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தது .

அதாவது இந்த மலையில் உள்ள ஆலயத்தில் கிராம மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ள தடைகள் இல்லை எனவும் இப்பகுதியில் இரண்டு தரப்பினரும் புதிதாக கட்டுமானங்களை செய்யவோ தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தவோ முடியாது எனவும் மன்று பணித்திருந்ததுக்கு அமைவாக கிராம மக்கள் தமது ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில் புதிய அரசு மாற்றத்தின் பின்னர் இந்த மலையில் அமைந்திருந்த சூலம் ஒன்று உடைத்து எறியப்பட்டிருந்தது .

அத்தோடு அந்த பகுதியில் காவலரண் ஒன்றினை அமைக்கும் பணியினையும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்கொண்டிருந்தனர். இந்த காவலரண் அமைக்கும் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் 10 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினரால் நகர்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு புதிய கட்டுமானங்கள் செய்யமுடியாது காவலரண் அமைக்கமுடியும் என மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பூரணை தினமான இன்று ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கிராம மக்களின் ஆலயம் அமைந்துள்ள பகுதி கூகிள் (map )வரைபடத்தில் குருந்தாசேவ பௌத்த விகாரை என சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் அடையாள படுத்த பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.