மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் இன்று (2) காலை யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் நடைபெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலச்சந்திரன், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மதத் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்க்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திர பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவரை கௌரவித்து துணை தூதுவரால் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.