தமிழர்களிடமிருந்து முஸ்லிம்களை பிரிப்பதில் எமது உளவுப்பிரிவும் உதவியது: ரணில் சாட்சியம்!

Ranil 800x466 1
Ranil 800x466 1

தமிழர் தரப்புடன் இணைந்திருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தை கொண்ட தரப்பாக பிரிப்பதற்கு உளவுத்துறைக்கு பெரும் தேவையிருந்தது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்தபோது இதனை தெரிவித்தார்.

வடக்கிலிருந்த முஸ்லிம்களை, விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை தொடர்ந்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுப்பிரிவுகளும் மறைமுகமாக உதவி செய்தன. புலிகளுடனான யுத்தத்தின் போது உளவுத்தகவல்களை பெற்றுக்கொள்ளும் யுக்தியாக அது பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பிரகடனமும், ஒலுவில் பிரகடனமும் சமனானதல்ல என குறிப்பிட்ட ரணில், முஸ்லிம்கள் தனியான இனத்துவ அடையாள தரப்பாக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்ட பின்னணியை விளக்கினார்.

விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், முஸ்லிம்களை தனித்துவ அடையாளத்துடன் அரசியலில் அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபும் அந்த கொள்கையுடன் இருந்தார். முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்து, தனியான தரப்பாக அடையாளப்படுத்த எமது உளவுச்சேவைக்கும் பெரிய தேவையிருந்தது. அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம். அவ்வாறு முஸ்லிம்களை தனியான தரப்பாக அடையாளப்படுத்துவதன் மூலம் யுத்தத்தின் போது உளவுத்தகவல்களை பெறுவது இலகுவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.