நெருக்கடியான காலகட்டத்துக்குள் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமல்ல : கரு ஜயசூரிய

நாடு மீண்டும் கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் காணப்படும் வேளையில், அரசியலமைப்புத் திருத்தங்களை ஏற்படுத்தல் அல்லது அதனையொத்த வேறு அரசியல் காரணிகளை மையப்படுத்தி நேரத்தை விரயம் செய்துகொண்டிருப்பது பொருத்தமானதல்ல என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அண்மையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருப்பது அசாதாரணமான விடயமாகும். தற்போதைய சூழ்நிலையில் மக்களால் முறையான சுய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாத பட்சத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஊரடங்குச்சட்டம் உட்பட வேறு எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளும் பயன்தராது.

எனவே அனைவரும் இதனை அலட்சியம் செய்யாமல் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதே போன்று எமது நாடு ஏற்கனவே ஒருமுறை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. எனவே எம்மால் மீண்டும் அதனைச் செய்யமுடியும்.

முதலில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, நோயாளர்களைப் பாதுகாப்பதற்கும் மேலும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாடு மீண்டும் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் காணப்படும் வேளையில், அரசியலமைப்புத் திருத்தங்களை ஏற்படுத்தல் அல்லது அதனையொத்த வேறு அரசியல் காரணிகளை மையப்படுத்தி நேரத்தை விரயம் செய்துகொண்டிருப்பது பொருத்தமானதல்ல.

தெற்காசியப்பிராந்தியம் முழுவதுமே வைரஸ் பரவலினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு நாடு என்ற வகையில் நாம் மிகமோசமான தலைவிதிக்கு உட்படாதிருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.