தொற்று நீக்க சட்ட விதிகளை கடைப்பிடிக்க தவறின் கடும் நடவடிக்கை- அஜித் ரோஹண

66 2
66 2

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட அலையின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தொற்று நீக்க சட்டவிதிகளுக்கமைய அமுல்படுத்தப்பட்டுள்ள, ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் , அதில் மேலும் கூறியதாவது ,

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட அலையின் தாக்கத்தை தடுப்பதற்காக, கம்பஹா மாவட்டத்தில் காணப்படும் , 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் போது ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக 91 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் , 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் பாரவூர்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சில வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அப்பகுதிகளில் காணப்படும் மருந்தகங்கள் , சதோச வர்த்தக நிலையங்கள் உட்பட சொகுசு வர்த்தக நிலையங்கள், விலங்குகள் உற்பத்தி மற்றும் விநியோக நிலையங்கள், மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான விற்பனை நிலையங்கள், உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் அரச மற்றும் நிறுவனங்கள் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யவதற்காகவோ அல்லது சேவையை பெற்றுக் கொள்வதற்காகவோ வருகைத் தருபவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் , நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேண வேண்டியது கட்டாயமாகும். இதேவேளை இந்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக செல்லும் போது வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் மாத்திரமே செல்ல வேண்டும். இதன்போது தங்களது வீட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள நிறுவனங்களிலே வாடிக்கையாளர்கள்  தங்களது சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதேவேளை தொற்று நீக்க சட்டவிதிகளுக்கமைய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் ஏனைய சட்ட விதிகளை மீறிச் செயற்படும் நபர்கள் கைது செய்யப்படுவதுடன் , அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.