வனவளத் திணைக்களம் மீண்டும் அநீதி இழைப்பதாக காஞ்சூர மோட்டை மக்கள் குற்றச்சாட்டு.

IMG 4593
IMG 4593

தமக்கு கிடைக்க வேண்டிய முழுக்காணிகளையும் வழங்காமல் சொற்ப அளவான காணிகளை மாத்திரம் விடுவிப்பதற்கான செயற்பாட்டை வனவளத்திணைக்களம் முன்னெடுக்கின்றது. இதன்மூலம் தமது கோரிக்கைகளிற்கு மீண்டும் அநீதி இழைக்கப்படுவதாக வவுனியா வடக்கின் காஞ்சூர மோட்டை கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

IMG 4592


வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்ச்சூழல் காரணமாக 1980, 90 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறுபகுதிகளிற்கு இடம்பெயர்ந்து  சென்றமக்கள் மீண்டும் வந்து காடுகளாக கிடக்கும் தமது காணிகளையும், தமது பெற்றோர்கள் வசித்த காணிகளை பிள்ளைகளும் துப்பரவாக்கி தற்காலிக கொட்டில்கள் அமைத்து வசித்து வருகின்றனர், இந்நிலையில் குறித்த காணிகள் தமக்குரியது என்று வனவள திணைக்களத்தால்  கூறப்படுவதுடன் மக்கள் மீள் குடியேறுவதிலும், வீடுகளை அமைப்பதற்கும் வனவள திணைக்களம் தடையை ஏற்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதி மக்களிற்கும், வனத்துறையினருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டு வருகிறது.


இந்நிலையில் கடந்தவாரம் குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் தற்போது குடியேறியுள்ள 42 பேருக்கான காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எனினும் ஒரு ஏக்கரைவிட  அதிக அளவிலான காணிகள் எமக்கு கிடைக்க‌ வேண்டிய நிலையில் தற்போது நாம் பயன்படுத்தி வரும் சிறுபகுதி காணிகளை மாத்திரம் வழங்குவதற்காக அளக்கப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பற்றைகளாக இருக்கும் ஏனைய பகுதிகளை விடுவிக்க முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கிராம பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற நாம் குறைந்தது ஒரு ஏக்கர் அளவிலான காணிகள் இருந்தாலே விவசாய செய்கையினை மேற்கொள்ள முடியும். வாழ்வாதாரம் இன்றி அல்லல்பட்டு வருகின்ற நிலையில் எமது காணிகள் வழங்கப்பட்டால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர் பார்த்திருந்த நிலையில் தற்போது சிறியளவிலான காணிகளை மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து எமக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு சேர வேண்டிய காணிகளை முழுமையாக வழங்குமாறு அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

 
காஞ்சூரமோட்டை கிராமம் அமைந்துள்ள காணிகளில் வசித்த மக்கள் போர் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு உரிய நடைமுறையை பேணாது வனவள திணைக்களத்தினால் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவள திணைக்களத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டிருந்தது. தற்போது காடுகளாக காணப்படும் குறித்த காணிகளில் முன்னர் மக்கள் வசித்தமைக்கான சான்றுகள் (பாழடைந்த கட்டடங்கள், கிணறுகள்) காணப்படுவதுடன் சிலர் அந்த காணிகளிற்கான அனுமதி பத்திரங்களையும் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.