ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

kaithu

கம்பஹா மாவட்டத்தில் 19 காவல் துறை பிரிவுகளில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு இன்னும் அமுலில் காணப்படுகின்றது.

இந் நிலையில் இன்று மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ள காவல்துறை, கொரோனா வைரஸ் மேலும் பரவாது தடுக்க பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 37 பேர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் மொத்தமாக 302 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 53 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே நேற்றைய தினம் (18) களுத்துறை மாவட்ட ஓவிடிகல கிராமசேவகர் பிரிவு, பதுகம கிராமசேவகர் பிரிவு, பதுகம புதிய கொலணி கிராமசேவகர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது பரீட்சை அட்டையினை காவல் துறை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்த முடியும் என்றும் காவல் துறையினர் சுட்க்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.