திருகோணமலையில் இந்திய – இலங்கை கடற்படையினருக்கு கூட்டு ஒத்திகை ஆரம்பம்!

இந்திய – இலங்கை கடற்படையினரின் 3 நாள் கூட்டு ஒத்திகை திருகோணமலையில் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.

மூலோபாய நலன்கள் குறித்த விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரிக்கும் ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தக் கூட்டு ஒத்திகை அமைந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருநாடுகளினது கடற்படையினர் மத்தியிலான இயங்கு தளத்தை மேலும் வலுவானதாக மாற்றுவதற்காக விமான எதிர்ப்பு ஆயுதங்களை பரீட்சித்து பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்படை நீர்மூழ்கிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தனது கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ் காமோத்திரா ஹில்டன் ஆகியவற்றை இந்த ஒத்திகையின் போது பயன்படுத்தவுள்ளது.

இந்திய கடற்படை தனது செட்டாக் ஹெலி கொப்டர்கள்,டோர்னியர் கடலோர ரோந்து விமானம் ஆகியவற்றையும் இந்த ஒத்திகையில் ஈடுபடுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை தனது கடலோர ரோந்து கப்பலான சயுராவையும்,கஜபாகு பயிற்சி கப்பலையும் ஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளது.

அயலவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இரு நாடுகளினதும் கடற்படையினர் மத்தியிலான ஒத்துழைப்பு கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.