மணிவண்ணனை யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது சட்டவலுவற்றது – சட்டவாளர்கள்

5655
5655

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது சட்டவலுவற்றது என்று சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் வழங்கிய அறிவித்தலை சட்டத்தரணி வி.மணிவண்ணன், நீதிமன்றின் ஊடாக சவாலுக்கு உட்படுத்த முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“கட்சியின் உறுப்புரிமையிலிருந்து ஒருவரை நீக்குவதாயின் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பில் உறுப்பினர் மீதான சாட்டுதல்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மீது எந்தவொரு விசாரணையும் நடத்தப்படாமல் தனியே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுத் தீர்மானத்தின் அடிப்படையில் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனவே யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கும் நோக்குடனேயே கட்சி உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அறிவிப்புக்கு அமைய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று வி.மணிவண்ணனை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து தெரிவத்தாட்சி அலுவலகர் நீக்குவது சட்டவலுவற்றது.
அதனை மாவட்ட நீதிமன்றின் ஊடாக சட்டத்தரணி வி. மணிவண்ணன் சவாலுக்கு உட்படுத்த முடியும்” என்றும் சட்டவாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.