வெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு!

University of Jaffna
University of Jaffna

வடக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெற்றிடங்களை நிரப்புவதில் அசமந்தப் போக்குடன் இருப்பதனால் இளஞ் சந்ததிதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழக மூதவையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை இன்று செவ்வாய்க்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே பல்கலைக்கழகத்தில் வெற்றிடங்களை நிரப்புவதில் நிர்வாகம் காட்டும் அசமந்தப்போக்குகள் குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பல பீடங்கள் மற்றும் துறைகளில் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்படாதிருப்பதுடன், சில துறைகளில் நீண்ட காலமாக – பல வருடங்களாகப் பல பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் விண்ணப்பங்கள் கோரப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்தமையையும் துணைவேந்தர் இன்றைய கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்.

நூலகத்தில் நிலவும் உதவி நூலகர் பதவிக்காக 2018 ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதற்காக சுமார் 160 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.

எனினும் சுமார் இரண்டு வருடங்களாக நேர்முகத் தேர்வு நடாத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட அனுமதியின் படி, நேற்று திங்கட்கிழமை முதல் நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் கணிசமான விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளிக்கவில்லை.

இத்தகை நிலமை இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுமாறு இன்றைய மூதவைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதனை சார் வெற்றிடங்கள் மற்றும் நிர்வாக அதிகார வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்கும் வகையில் விண்ணப்பங்களின் செல்லுபடியாகும் காலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், பல போதனை சாரா ஊழியர் பதவிகளுக்காக நேர்முகத் தேர்வுகள் முடிந்த பின்னரும் நியமனங்களை வழங்குவதில் பல்கலைக்கழக நிர்வாகம் காட்டிய அசமந்தப் போக்கின் காரணமாகக் கடந்த வருடம் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமையும், அதன் பின் அந்த நியமனங்களுக்கான நடைமுறைகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுத்தி வைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.