புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பம்!

6 2 copy
6 2 copy

நடைபெற்று முடிந்த இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் கடந்த 17 மற்றும் 20ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு உரிய மத்திய நிலையங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஏற்கனவே குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகள் தவிர்ந்த நாடளாவிய ரீதியிலான ஏனைய பகுதிகளில் 39 மதிப்பீட்டு மத்திய நிலையங்களிலும், 391 மதிப்பீட்டு நிலையங்களிலும், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், நாளைய தினம் ஆரம்பமாவதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பாடசாலை பரீட்சை மதிப்பீட்டுக் கிளையின் 0112 785 231, 0112 785 216 மற்றும் 0112 784 037 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம் தொடர்பு கொண்டு அறிய முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.