இலங்கை அரசியலில் மற்றொரு திருப்பம் – அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டு

இலங்கை வரலாற்றில் மற்றொரு திருப்பம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்றைய (22) தினம் 20ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

எதிர் கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுவரும் நிலையிலும், பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் என்று அரசாங்கம் சூளுரைத்திருக்கிறது .

இதற்கிடையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் தரப்பில் உள்ள அமைச்சர்கள் சிலரை அழைத்து நேற்றைய தினம் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்படவுள்ள 20வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் உள்ளது என்ற திடமான நம்பிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இருப்பதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் வசித்து வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஒருவரது வீட்டில் பசில் ராஜபக்ச நேற்றைய தினம் சுமார் இரண்டு மணி நேரம் எவ்வித பரபரப்பும் இன்றி தங்கி இருந்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இன்று மாலை மிக இலகுவாக பெற்றுக்கொள்ளவுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.