கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பமானது இப்படித்தான் – சிங்கள செய்தித்தாள் தகவல்!

உக்ரைனிலிருந்து வந்த விமான பணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என சிங்கள செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

துருக்கியிலிருந்து வந்த இலங்கை விமானத்தில் உக்ரைனை சேர்ந்த 11 விமான பணியாளர்கள் இலங்கை வந்தனர். அவர்கள் சீதுவையில் உள்ள உணவு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியானதை தொடர்ந்து அவர் கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

உணவு விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பாதிக்கப்பட்டதால் அவருடன் உணவு விடுதி பணியாளர்களையும் தனிமைப்படுத்தவேண்டும்.

ஆனால், உணவு விடுதி நிர்வாகம் இதனை பின்பற்றவில்லை எனவும் குறிப்பிட்ட உணவு விடுதியின் 60 பணியாளர்களில் 18 பேர் தங்கள் வீடுகளுக்கு சென்று வருபவர்கள், அவர்களில் ஐவர் இதுவரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

உணவு விடுதி பணியாளர்களிடமும் பிரன்டிக்ஸ் தொழிலாளர்களிடமும் காணப்பட்ட வைரஸ்கள் ஒரே மாதிரியானவையாக காணப்படுகின்றன. இது இரண்டாவது அலை சீதுவ உணவு விடுதியில் இருந்தே ஆரம்பமானது என்பதை புலப்படுத்தியுள்ளது என சிங்கள செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.