இலங்கையின் சுதந்திரத்திலும் இறைமையிலும் அமெரிக்கா தலையிடகூடாது – ஜே.வி.பி வேண்டுகோள்

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின்; பின்னணியில் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன என தெரிவித்துள்ள ஜே.வி.பி இலங்கையின் சுதந்திரத்திலும் இறைமையிலும் தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னர் கருத்து வெளியிடும்போது ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையை தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதற்கும் ,தேவையற்ற பிராந்தியத்தின் அதிகார மோதலிற்குள் இலங்கையை இழுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் எம்.சி.சி உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் இரகசிய நிகழ்ச்சி நிரல் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என ஜனாதிபதியோ பிரதமரோ தெரிவிக்கவில்லை. அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ளது என நாங்கள் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஜே.வி.பி அமெரிக்க தூதரகத்திடம் மனுவொன்றையும் சமர்ப்பித்துள்ளது.