பி .சி.ஆர். இயந்திரங்களை திருத்தும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் -சஜித்

பழுதடைந்த பி.சி.ஆர்.இயந்திரங்களை உடனடியாக திருத்துதல் மற்றும் புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் செயற்பாட்டை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டுக்குள் பரவியுள்ள கொரோனா அலையை கட்டுப்படுத்தும் செயற்பாடு பின்னடைவை அடைந்துள்ளது.

நாட்டிலுள்ள பி.சி.ஆர்.இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ளமையே இதற்கான காரணமாக கருதப்படுகிறது. இந்த பி.சி.ஆர்.இயந்திரங்கள் தரமானவையாக எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இவை பழுதானால், அதனை திருத்தும் தொழில்நுட்பமும் ஆட்களும் இலங்கையில் இல்லாதமை பெரும் இழப்பாக காணப்படுகிறது.

இதனால், நாட்டு மக்கள் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். சுகாதார சேவையில் ஆட்பலமும் குறைந்துள்ளது.

எனவே, பி.சி.ஆர்.இயந்திரங்களை துரிதமாக திருத்துவதும், புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதும் அத்தியாவசியமாக காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .