நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை

201909220304514180 In Tamil Nadu today with rain showers likely SECVPF
201909220304514180 In Tamil Nadu today with rain showers likely SECVPF

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப் பிரதேசங்களில் சில இடங்களில், குறிப்பாக ஊவா மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.