கூட்டமைப்பிடம் நிபுணர் குழுவை நியமிக்குமாறு இந்தியா கோரிக்கை!

download 1 7
download 1 7

தமிழ் மக்களின் பிரச்சினைகளை விடயங்கள் சார்ந்து ஒன்றன் பின் ஒன்றாக கையாள்வதற்காக துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு இந்திய இராஜ தந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

தொல்பொருள், பண்பாட்டு, கலாசார ரீதியாக ஆக்கிரமிக்கப்படும் செயற்பாடுகள் அல்லது திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடனான பல்வேறு தொடர்பாடல்கள் மற்றும் சந்திப்பிக்களின் போது இராஜதந்திர தரப்புக்களிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்தே தமது தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்காக கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அப்பால் துறைசார்ந்த குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் இராஜதந்திர தரப்புக்களால் கோரப்பட்டள்ளது.

அக் கோரிக்கைக்கு அமைவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விரைவில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. இந்தக் குழுவானது, மக்கள் பிரச்சினைகளை முக்கியத்துவத்தின் அடிப்படையின் உரிய தரவுகளுடன் கிரமமாக ஆவணப்படுத்தப்படவுள்ளது.

இதில் மாகாண சபை முறைமையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களும் இடம்பெறவுள்ளன.

அதனைத்தொடர்ந்து இராஜதந்திர தரப்புக்களின் மூலம் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளது.

எனினும் தற்போது வரையில் இந்த விடயம் சம்பந்தமாக கூட்டமைப்பினுள் பரஸ்பர கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் விரைவில் இவ்விடயம் சம்பந்தமாக கூட்டமைப்பு கூடிப் பேசவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.