முல்லை நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட நினைவேந்தல் தடைக்கு எதிராக நகர்தல் பத்திரம் தாக்கல்

IMG 1574
IMG 1574

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு 41 பேருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு , முள்ளியவளை ,மல்லாவி ,மாங்குளம் ,ஆகிய காவல்துறை நிலையங்களை சேர்ந்த காவல்துறையினரால் தமது காவல்துறை பிரிவுகளில் நிகழ்வை நடத்துவதற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இவ்வாறு நீநிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி தடையுத்தரவுக்கு எதிராக தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான பன்னிரெண்டுபேர் கொண்ட குழுவினரால் இன்று(23) நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர்கள் சிறிது நேரத்தில் மன்றில் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் நீதிமன்றால் மாவீரர் நாளுக்கு தடைவிதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக, அங்கு மன்றில் ஆஜராவதற்காக எம்.ஏ.சுமந்திரன் சென்றுள்ள நிலையில் அந்த வழக்கின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவுள்ளார்.

இந் நிலையில் நீதிமன்றத்தினால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடைக்கட்டளையினை மீள் பரிசீலணைசெய்யுமாறு கோரி, தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கமலநாதன் விஜிந்தன், திருச்செல்வம் ரவீந்திரன், தவராசா அமலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் சத்தியசீலன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழ் ஆர்வலர்களானதம்பையா யோகேஸ்வரன்,ஞானதாஸ் யூட்பிரசாந்த், சிமித்கட்சன் சந்திரலீலாஆகியோர் அடங்கிய பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவினராலேயே இவ்வாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.