போதைப்பொருள் கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

arrest 1
arrest 1

சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் 6 ஆயிரத்து 334 கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதில் எவரும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை. போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளே துரிதப்படுத்தப்படவுள்ளன.

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2 கிராமுக்கும் குறைவான ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டுகள் மற்றும் 5 கிலோ கிராமுக்கு குறைவான கஞ்சா கடத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் வழக்கு விசாரணைகளே இவ்வாறு துரிதப்படுத்தப்படவுள்ளன.

அவர்களின் தகவல்கள் அடங்கிய அறிக்கை நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு குறப்பிட்டுள்ளது.

இந்த விடயம் மற்றும் சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.