ஆயித்தியமலை அரச அரிசி ஆலையினை உடனடியாக செயற்படவைக்க அரசாங்க அதிபர் கருணாகரன் நடவடிக்கை!

8e441c1c ddfc 47fc a64d 733da846e3c0

மட்டக்களப்பு – ஆயித்தியமலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆலையினை இம்முறை அறுவடைசெய்யப்படும் பெரும்போக நெல்லினைக் கொண்டு செயற்படவைக்க மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உன்னிச்சைக் குளத்தின் நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் அறுவடைகளுக்கு சந்தை வாய்ப்பினையும், அப்பகுதி மக்களின் தொழி வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவின் ஆயித்திய மலைப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச அரிசி ஆலையினை பார்வையிடும் அரசாங்க அதிபரின் களவிஜயம் இன்று (01) இடம் பெற்றது.

இம்முறை செய்கை பண்ணப்படும் பெரும்போக நெல் அறுவடையினைக் கொண்டு இவ்வரிசி ஆலையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் கருணாகரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இக்களவிஜயத்தின்போது மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவனீதன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், மண்முனை மேற்கு வவுனதீவு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மண்முனை மேற்கு பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேஸ் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

சுமார் 65 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இவ்வரிசி ஆலையானது அமைக்கப்பட்ட நோக்கத்திற்கமைவாக கூட்டுறவு அமைப்பினூடாக செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.