மட்டக்களப்பில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன் ஆயத்தங்கள் தயார்- கருணாகரன்

DSC 0159

மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார் நிலையில் இருப்பதை அரசாங்க அதிபர் கே. கருணாகரன் உறுதிப்படுத்தினார்.

அனர்த்த முகாமைத்துவ அவசர ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட அரசாஙக அதிபர் கருணாகரன் தலைமையில் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன் ஆயத்தங்களுடன் மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட சம்மந்தப்பட்ட சகல திணைக்களங்களும் தாயர் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் இந்நிலையில் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கேற்றவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதாரப் பகுதியினரின் ஆலோசனைகளும் அவர்களது பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேநிலையில் மக்கள் அச்சமடையாது அவ்வப்போது வழங்கப்படும் அரச அறிவித்தல்களையும், வானொலி அறிவித்தல்களையும் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கரையோரப்பிரதேசங்களிலும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் பிரதேசங்களிலும் இருக்கும் மக்கள் அவதானத்ததுடன் இருக்கும் படியும், மீனவர்கள் எதிர்வரும் சில தினங்களுக்கு கடலுக்குச் செல்லாமல் இருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதவிர கிழக்குமாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். ஏ. மயூரன், மட்டக்களப்பு காலநிலை அவதான நிலைய ஓய்வுநிலை அதிகாரி, சூரியகுமார் உட்பட சகல திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், சுகாதாரப் பிரிவினர் பலரும் கலந்துகொண்டனர்.