இலங்கை அணியின் அடுத்த சங்கக்கார ஆக குணதிலக்க இருக்க முடியும்- அப்ரிடி!

Danushka cover
Danushka cover

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு கண்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியில் மொத்தமாக 66 பந்துகளை எதிர்கொண்ட தனுஷ்க குணதிலக்க 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதன் மூலம் எல்.பி.எல். தொடரில் தனுஷ்க குணதிலக்க எட்டுப் போட்டிகளில் விளையாடி நான்கு அரைசதங்களுடன் மொத்தமாக 462 ஓட்டங்களை குவித்துள்ளார்.

எல்.பி.எல். தொடரில் வீரர் ஒருவர் அதிகபடியாக பெற்றுள்ள ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இந் நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து இடைநடுவில் விலகிச் சென்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைவரான ஷாஹித் அப்ரிடி தனுஷ்கவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்த அப்ரிடி,

குணதிலகாவின் அற்புதமான செயல்திறனுக்கும் அரையிறுதிக்குள் நுழைந்த எனது அணியான காலிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த சங்கக்கார ஆக குணதிலக்க இருக்க முடியும். உண்மையில் அவர் ஒரு சிறந்த திறமையுடையவர் என்றார்.