பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தை புறக்கணித்த 10 மே.இ.தீவுகள் அணியின் வீரர்கள்!

WestIndiesjpg
WestIndiesjpg

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பங்களாதேஷுக்கான சுற்றுப் பயணத்திலிருந்து மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் ஜோசன் ஹோல்டர், துணைத் தலைவர் ரோஸ்டன் சேஸ் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அணித் தலைவர் கிரோன் பொல்லார்ட் உள்ளிட்ட 10 வீரர்கள் விலகியுள்ளனர்.

டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஷெல்டன் கொட்ரெல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் கொவிட் -19 தொடர்பான கவலைகள் அல்லது தனிப்பட்ட அச்சங்கள் காரணமாக சுற்றுப்பயணம் செய்வதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டதாக மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சகலதுறை ஆட்டக்காரரான ஃபேபியன் ஆலன் மற்றும் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ஷேன் டோவ்ரிச் ஆகியோரின் விலகலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஹோல்டர் இல்லாத இந் தருணத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரெய்க் பிராத்வைட் டெஸ்ட் அணியை வழிநடத்துவார். அவர் இறுதியாக 2018 இல் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ட் அணியின் தலைவராகவும் இருந்தார்.

அதேநேரம் ஒருநாள் அணிக்கு ஜேசன் மொஹமட் தலை‍மை தாங்குவார். அவர் இறுதியாக 2018 ஆம் ஆண்டு அணிக்காக விளையாடியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம்,கொரோனா தொற்று அச்சம்கொள்கையின்படி, எந்தவொரு வீரரும் பாதுகாப்பு குறித்த அச்சத்தின் பேரில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலிருந்து விலகலாம். மேலும் இந்த முடிவு அவர்களின் எதிர்கால தேர்வுகளை பாதிக்காது என்று தனது அணியிருனருக்கு அறுவுறுத்தியுள்ளது.

குடும்பங்கள் குறித்த கவலைகள் காரணமாக பிராவோ மற்றும் ஹெட்மியர் ஆகியோர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அழைப்புகளை முன்னர் நிராகரித்தும் இருந்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது ஜனவரி 10 ஆம் திகதி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.

அதன் பின்னர் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 20 ஆம் திகதியும், டெஸ்ட் தொடர் பெப்ரவரி 03 ஆம் திகதியும் ஆரம்பமாகும்.