மே.இ.தீவுகளுக்கு வெற்றியிலக்கு 375 ஓட்டங்கள்!

ExQb10 UcAA L8X
ExQb10 UcAA L8X

மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி 476 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த நான்காவது நாளிலேயே 22 வயதான இலங்கை அணி வீரர் பதும் நிசங்க சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 69.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸுக்காக 103 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் ராகீம் கார்ன்வால் 61 ஓட்டங்களையும், ஜோசுவா தசில்வா 46 ஓட்டங்களையும், கைல் மேயர்கள் 45 ஓட்டங்களையும் மற்றும் ஜோன் காம்ப்பெல் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடனும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

102 ஓட்டங்களினால் பின்னிலை வகித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் (திமுத் கருணாரத்ன – 03) 2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த லஹிரு திரிமான்ன – ஓசத பெர்னாண்டோவின் இணைப்பாட்டம் வலுவான இலக்கினை எட்ட இலங்கை அணிக்கு கைகொடுத்தது.

அதன்படி இவர்கள் 162 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இந் நிலையில் 56.1 ஆவது ஓவரில் ஓசத பெர்னாண்டோ 11 பவுண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட, அடுத்து வந்த தினேஷ் சந்திமலும் 4 ஓட்டத்துடன் வெளியேறினார்.

அவரின் வெளியேற்றத்தின் பின்னர் ஆரம்ப வீராக களமிறங்கிய லஹிரு திரமான்னவும் 76 ஓட்டங்களுடன் கேமர் ரோச்சின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

அதன் பின்னர் தனஞ்சய டிசில்வாவும், பதும் நிஷாங்கவும் 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து ஆடிவர, மூன்றாம் நாள் ஆட்டமும் நிறைவுக்கு வந்தது.

மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை 86 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 255 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் நேற்றைய தினம் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க இலங்கை அணி 153 ஓட்ட முன்னிலையுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

46 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தனஞ்சய டிசில்வா அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் 86.5 ஆவது ஓவரில் அல்சாரி ஜோசப் இன் பந்து வீச்சில் போல்ட் ஆனார். 

எனினும் அதன் பின்னர் 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பதும் நிஷாங்கவும் நிரோஷன் திக்வெல்லவும் அணியின் ஓட்ட இலக்கினை 400 க்கு மேல் கொண்டு சேர்த்தனர். 

இந் நிலையில் 136.3 ஆவது ஓவரில் பதும் நிஷாங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்து அனைவரது கவனத்த‍ையும் ஈர்த்தார்.  

எனினும் அவர் 103 ஓட்டங்களை பெற்ற நிலையில் கார்ன்வால் இன் பந்து வீச்சில் கேமர் ரோச்சிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 

அதனால் இலங்கை அணி 438 ஓட்டங்களுக்கு தனது 6 ஆவது விக்கெட்டை இழந்தது, பதும் நிஷாங்கவுக்கு தோள் கொடுத்தாடிய நிரோஷன் திக்வெ்லவும் 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார்.

இறுதியாக இலங்கை அணி 149.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 467 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணி 374 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் மற்றும் கார்ன்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

375 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஜான் காம்ப்பெல் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கிரெய்க் பிராத்வைட் 8 ஓட்டங்களுடனும், போனர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.