கொல்கத்தாவை வீழ்த்தி 10 ஓட்டங்களால் மும்பை வெற்றி

Kolkata Knight Riders vs Mumbai Indians IPL 20214
Kolkata Knight Riders vs Mumbai Indians IPL 20214

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீச்சில் அசத்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.பி.எல். 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது. ரோகித் சர்மா, குயின்டன் டி கொக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

குயின்டன் டி கொக் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் விளாசினர். அடுத்து வந்த இஷான் கிஷன் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். ரோகித் சர்மா 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன்பின் கொல்கத்தாவின் அன்று ரஸல் பந்துவீச்சில் மும்பை அணி திணறியது. ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களுடனும், குருணால் பாண்ட்யா 15 ஓட்டங்களுடனும் மார்கோ ஜென்சன் ஓட்டமெதனையும் பெறாதும் ராகுல் சாஹர் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 152 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

கொல்கத்தா அணியின் அன்று ரஸல் 4 ஓவரில் 15 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், ஷுப்மான் கில்லும் இறங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 72 ஓட்டங்களை சேர்த்தனர். கில் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 5 ஓட்டங்களுடனும் மார்கன் 7 ஓட்டங்களுடனும் ஷகிப் அல் ஹசன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்.

இறுதிய 4 ஓவரில் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக், அன்று ரஸல் ஆடினர். 17 ஆவது ஓவரில் 8 ஓட்டங்கள் கிடைத்தது. 18 ஆவது ஓவரில் 3 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது. 19 ஆவது ஓவரில் வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மும்பை அணியின் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.