கால்பந்தாட்டத்துறையில் மறுமலர்ச்சியுடன்கூடிய புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும்- ஜஸ்வர் உமர்!

ca4c6d0e f0a3 4a60 b484 79038e511719
ca4c6d0e f0a3 4a60 b484 79038e511719

இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டில் புத்தெழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துவேன் என்று இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சமகால செயலாளர் நாயகமும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருமான ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் ஏற்கனவே பலதடவைகள் கூறியதுபோல கால்பந்தாட்ட துறையில் உள்ள கறைகளை சுத்திகரித்து, குறைகளை நிவர்த்திசெய்து அதன் நற்பெயரையும் நேர்மையையும் மீண்டும் நிலைநிறுத்துவதே என் முன்னே இருக்கின்ற தலையாய பணியாகும். இதனை ஒரு மிகப் பெரிய சவாலாக எடுத்துக்கொண்டு கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்காக என்னாலான அனைத்தையும் செயலுருவாக்குவேன்.

இலங்கையில் கடந்த பலவருடங்களாக இரண்டு பிரதான கால்பந்தாட்ட போட்டிகளே நடத்தப்படுவதுடன் ஒரு கழகம் அதிகப்பட்சம் 10 முதல் 15 தடவைகளே களம் இறங்குவதால் கால்பந்தாட்டத்தின் தரம் குறைந்துள்ளது,
‘கால்பந்தாட்ட விளையாட்டை ஏழைகளின் விளையாட்டு என வருணிக்கப்படுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

இன்று உலகம் முழுவதும் ஒரு சில விளையாட்டுக்களிலும் பார்க்க வீரர்கள் அதிகம் சம்பாதிப்பது கால்பந்தாட்ட விளையாட்டில்தான்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் அது இன்னும் ஏழைகளின் விளையாட்டாகவே இருந்து வருகின்றது. முன்னைய நிருவாகங்களும் இதற்கு காரணம். இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

‘எனவே இங்கிலாந்தை போன்று ஏழு பிரிவுகளில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்தி கால்பந்தாட்ட விளையாட்டில் புத்தெழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துவேன். இதன் மூலம் தொழில்சார் கால்பந்தாட்டத் துறையை இலங்கை முழுவதும் வியாபிக்க செய்வேன். இதன் முதற்கட்டமாக சுப்பர் லீக் திட்டத்தை வடிவமைத்தேன். அத்துடன் அடிமட்ட கால்பந்தாட்டம், கிராமப்புற கால்பந்தாட்டம், பாடாலைகள் கால்பந்தாட்டம், கால்பந்தாட்ட பயிற்சியாக கால்பந்தாட்டம் ஆகியவற்றின் தரங்களை மேம்படுத்த கடுமையாக உழைப்பேன்.

‘தேசிய வீரர்கள், முன்னாள் தேசிய வீரர்கள், பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் மற்றும் கால்பந்தாட்டத்துறையுடன் தொடர்புபட்டவர்கள் நிறைந்த பலன்களை பெறும் வகையில் திட்டங்களை அமுல்படுத்துவேன். எனவே, கால்பந்தாட்ட விளையாட்டின்மீது அக்றையும் ஆர்வம் கொண்டவர்கள் யாருக்கும் விலைபோகாமல் கால்பந்தாட்டத்தை ஊக்குவிப்பதற்காக ஒத்துழைக்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுப்பதுடன், கால்பந்தாட்டத்தில் புத்தெழுச்சி, மறுமலர்ச்சி மற்றும் புதிய அத்தியாயம் ஆகியவற்றை ஏற்படுத்தி இலங்கை கால்பந்தாட்டத்தின் தரத்தை உயர்த்த எடுக்கும் தனது முயற்சிக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.