இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் : இலங்கைக்கு ஒரு தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்

Amasha with silver medal
Amasha with silver medal

இந்தியாவின் பத்தியாலாவில் நடைபெற்ற 60 ஆவது இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்ற இலங்கை ஒரு தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக 9 பதக்கங்களை வென்றெடுத்தது.

மேலும், பெண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் பங்கேற்ற மெதானி ஜயமான்ன வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், உலக இளையோர் மெய்வல்லுநர் போட்டிக்கான தகுதியையும் பெற்றுக்கொண்டு அசத்தினார்.

பஞ்சாப் மாநிலத்தின் பத்தியாலாவில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் கடந்த 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான 5 நாட்கள் 60 ஆவது இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லநர் போட்டி நடைபெற்றது.

இந்திய மெய்வல்லுநர் சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை சார்பாக 2 வீரர்கள், 8 வீராங்கனைகள் அடங்கலாக 10 பேர் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

இப்போட்டியில் இலங்கை பெற்றுக்கொண்ட ஒரேயொரு தங்கப்பதக்கத்தை ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற காலிங்க குமாரகே பெற்றுக்கொடுத்தார். இவர் இப்போட்டித் தூரத்தை 45.73 என்ற செக்கன்களில் நிறைவு செய்திருந்ததுடன், இது அவரது அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் அமைந்தது. ‍

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியி7லும் பங்கேற்ற காலிங்க குமாரகே 21.13 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி என 2 பதக்கங்களை இலங்கைக்கு வென்று கொடுத்தார்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 19 வயதான மெதானி ஜயமான்ன ‍போட்டித் தூரத்தை 24.08 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், உலக இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றுக்கொண்டார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அமாஷா டி சில்வா போட்டித் தூரத்தை 11.59 செக்கன்களில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், மெதானி, அமாஷா ஆகிய இருவருடன் லக்சிக்கா சுகந்தி, ஷெலிண்டா ஜென்சன் ஆகியோர் பங்கேற்ற பெண்களுக்கான 4 தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்தனர்.

இவர்கள் இப்போட்டியை 44.55 செக்கன்களில் நிறைவு செய்திருந்தனர். தெரிவு அஞ்சலோட்டப் போட்டிகளின் கோள் பரிமாற்றல்களின்போது விட்ட தவறுகளை மீண்டும் இறுதிப் போட்டியில் இலங்கை அஞ்சலோட்ட அணி தவறிழைத்திருந்தது. இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய இணைப்பு அணி ‍போட்டித் தூரத்ததை 44.15 செக்கன்களில் ஓடி முடித்திருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலிப் போட்டியில் பங்கேற்ற லக்சிக்கா சுகந்தி 13.90 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதுவே இலங்கை இப்போட்டியில் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமாகும்.

மேலும், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாராச்சி 2 நிமிடங்கள் 05.69 செக்கன்களில் ஓடி முடித்தும், பெண்களுக்கான 3000 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியில் பங்கேற்ற நிலானி ரட்ணாயக்க 10 நிமிடங்கள் 12.02 செக்கன்களில் நிறைவு செய்தும், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட சுமேத ரணசிங்க 77.28 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கங்களை இலங்கைக்கு வென்று கொடுத்தனர்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் ‍போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நதீஷா ராமநாயக்க 300 மீற்றர் தூரம் வரையிலும் முதலிடத்தில் இருந்து வந்ததுபோதிலும், அவரை இரு இந்திய வீராங்கனைகளும் கடந்து சென்றனர். இந்நிலையில் கடைசி 10 மீற்றர் தூரம் வரையிலும் மூன்றாவது இடத்திலிருந்த நதீஷாவால் போட்டியின் தூரத்தை நிறைவு செய்தபோது ஐந்தாவது இடமே கிடைத்தது.

அவர் இப்போட்டித் தூரத்தை 54.37 செக்கன்களிலேயே நிறைவு செய்தார். இந்த மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை பங்கேற்ற சகல போட்டிகளிலும் ஏதேனும் ஒரு பதக்கத்தை வென்றிருந்த போதிலும், எந்த விதமான பதக்கமொன்றையும் பெற முடியாத துரதிஷ்ட சம்பவமாக நதீஷா பங்கேற்றிருந்த பெண்களுக்கான 400 மீற்றர் போட்டி அமைந்தமை இலங்கை மெய்வல்லுநர் இரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.