கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் கபுகெதர

XL
XL

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சாமர கபுகெதர அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

கபுகெதர, இதுவரை 8 டெஸ்ட் போட்டிகள் உட்பட 163 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 2,745 ஓட்டங்களை குவித்துள்ளார்.

கண்டி – தர்மராஜ கல்லூரியில் இருந்து இலங்கை அணிக்கு உள்வாங்கப்பட்ட கபுகெதர, தன்னுடைய 19வது வயதில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினார்.

அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடிய கபுகெதரவின் பெறுபேறுகள் சீராக இல்லாததால், அவரை அணிக்குள் உள்வாங்குவதும், வெளியேற்றுவதுமாக தெரிவுக்குழு இருந்தது.

அதேநேரம், கடந்த 2017 ஆம் ஆண்டு பல்லேகலையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில், உபுல் தரங்கவுக்கு பதிலாக தற்காலிக அணித் தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

அதுமாத்திரமின்றி, சாமர கபுகெதர, இங்கிலாந்தின் கௌண்டி கிரிக்கெட் தொடரில் கடந்த பருவகாலத்தில் பங்கேற்றிருந்தார் என்பதுடன், ஐ.பி.எல். உள்ளிட்ட சில கழக மட்டத்திலான ருவென்டி 20 தொடர்களிலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.