2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவை நிறுத்த தீர்மானம்!

MOS
MOS

2020 ஆம் ஆண்டுக்கான மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவை ஒன்றாக சேர்த்து நடத்தப்படவிருந்தபோதும், நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்குரிய தேசிய விளையாட்டு விழா நடத்துவதற்கு முடியாமல் போனது.

இதனால் 2021 ஆம் ஆண்டுக்குரிய தேசிய விளையாட்டு விழாவுடன் சேர்த்து கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

எனினும், ‍நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுவதால் இம்முறையும் தேசிய விளையாட்டு விழா கைவிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் விளையாட்டுதுறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய குறிப்பிட்டுள்ளதாவது,

“இம்முறை நடத்த தீர்மானித்திருந்த தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுவதற்கான சான்றுகள் குறைவாகவே காணப்படுகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் மாத்திரமே அவர்களது மாகாண மட்ட போட்டிகளின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

ஏனைய மாகாணங்கள் தத்தமது மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளைக்கூட இதுவரை நடத்தி முடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே, இந்த ஆண்டின் இறுதிக்குள் தேசிய விளையாட்டு விழாவை நடத்தி முடிப்பதற்குரிய போதிய கால அவகாசம் இல்லை.

விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட அசாதாரணத்தை குறைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவின் நகர்வல ஓட்டம், வேக நடை, மரதன் மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகள் என்பன இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.