கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்!

isuru1
isuru1

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இசுரு உதான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சார்பில் 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

கடந்த வெள்ளியன்று இரவு நடைபெற்ற இப்போட்டியில் பார்படோஸ் ரோயல்ஸ் அணியும், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் ரோயல்ஸ் அணி 122 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மொயின் கானின் மகனான அசாம் கான் 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கையின் சகலதுறை வீரரான திசர பெரேரா 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏமாற்றமளித்தார்.

பார்படோஸ் அணியை துவம்சம் செய்த இசுரு உதான 4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

ஏனையோரில் ரவி ராம்போல் 2 விக்கெட்டுக்களையும், சுனில் நரைன், அக்கீல் ஹொசைன் இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டிரின்பாகோ அணி 16.5 ஓவர்களில் 4 விக்‍கெட்டுகளை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களை பெற்று 6 விக்‍கெட்டுகளால் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் அவ்வணித்தலைவர் பொல்லார்ட் 58 அதிரடியாக குவித்தார். போட்டியின் நாயகனாக இசுரு உதான தெரிவானார்.