இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அனில் கும்ப்ளேவை நியமிக்க யோசனை

anil kumble
anil kumble

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பதவிக்கு அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக வி.வி.எஸ். லகஸ்மனின் பெயரும் ஆலோசிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவி வகிக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், அனில் கும்ப்ளேவை மீண்டும் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பதவி வகித்த அனில் கும்ப்ளே, பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

அணித் தலைவர் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அனில் கும்ப்ளே பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின.

முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஸ்மன் ஆகியோர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினால், அப்போதைய சந்தர்ப்பத்தில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக சவுரவ் கங்குலி பதவி வகிப்பதால், மீண்டும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.