இலங்கை அணி தடுமாற்றம்!

Sikandar Raza Test wicket celeb.jpg
Sikandar Raza Test wicket celeb.jpg

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27 ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த சிம்பாப்வே அணி நேற்றைய(29) முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 406 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடும்போது, மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட இலங்கை அணி 54 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க சிம்பாப்வே அணியினரின் பந்துகளுக்கு தாக்குப் பிடிக்காத இலங்கை அணியினர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 113 ஓட்டங்களினால் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 44 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 22 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 64 ஓட்டங்களையும், அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் சிக்கந்தர் ராசா சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுக்களையும், கார்ல் மும்பா, டொனால்ட் டிரிபனோ மற்றும் விக்டர் நியாச்சி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.