ராஜஸ்தானை வெளியேற்றியது கொல்கத்தா

image 2020 11 02 071051
image 2020 11 02 071051

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 60 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் ஆரம்பமான 54 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ரோயல்சும் மோதின. 

AI 2563
AI 2563

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, களத்தடுப்பை தேர்வு செய்ய கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணி 2 ஆவது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. நிதிஷ் ரான எதுவித ஓட்டமின்றி ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் சுப்மான் கில்லும், ராகுல் திரிபாதியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஓட்ட எண்ணிக்கை 73 எட்டிய போது சுப்மான் கில் 36 ஓட்டங்களில் (24 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 3 ஆவது விக்கெட்டுக்கு வந்த சுனில் நரேன் டக்கவுட்டுடன் ஆட்டமிழக்க, திரிபாதி 39 ஓட்டங்களுடனும் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக்கவுட்டுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் பின்னர் அணித் தலைவர் இயான் மோர்கனும், ஆந்த்ரே ரஸல்லும் அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் மோர்கன் 2 பவுண்டரி, 2 சிக்சர்களை அடித்துத் தள்ளினார்.

image 2020 11 02 071051
image 2020 11 02 071051

சிறிது நேரமே தாக்குப் பிடித்து ஆடினாலும் ரஸல் 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 25 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய பேட் கம்மின்ஸுடன் இணைந்து மோர்கன் அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

குறிப்பாக பென் ஸ்டோக்சின் ஒரு ஓவரில் மோர்கனும், கம்மின்ஸும் இணைந்து 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் தெறிக்க விட்டனர். 

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை கடைசி வரை துவம்சம் செய்த மோர்கன் கடினமான வெற்றியிலக்கை அடைவதற்கு வித்திட்டார். 

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை குவித்தது.

மோர்கன் 35 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களுடனும், நாகர்கோட்டி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

192 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி சிக்ஸருடன் ஓட்ட கணக்கை அட்டகாசமாக தொடங்கியது. எனினும் அதிரடி காட்ட வேண்டிய இக்கட்டான நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

உத்தப்பா (6 ஓட்டம்), பென் ஸ்டோக்ஸ் (18 ஓட்டம்), ஸ்டீவன் ஸ்மித் (4 ஓட்டம்) ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் வரிசையாக வீழ்த்தினார்.

AI 2285
AI 2285

அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணியால் வெற்றியின் இலக்கை எட்டிக் கூட பார்க்க முடியவில்லை.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 60 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே-ஒப் சுற்றுக்கான வாய்ப்பு கைநழுவிப் போனதுடன், கொல்கத்தா அணி வாய்ப்பினை தக்க வைத்துக் கொண்டுள்ளது.