துருக்கியில் ஆக்சிஜன் குழாய் வெடித்து தீ விபத்து!

YgfswspE
YgfswspE

துருக்கி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 19 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பலர் அந்நாட்டு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரும் செயற்கை சுவாசக்கருவி உதவியுடனும் ஆக்சிஜன் உதவியுடனும் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், துருக்கியின் ஹாசியண்டீப் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழாயில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் தீவிர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர தீ விபத்தில் மருத்துமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த கொரோனா நோயாளிகள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 9 கொரோனா நோயாளிகள் உடல்கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிபத்தால் மருத்துவமனைக்குள் சிக்கிய நோயாளிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.