நித்தியானந்தாவின் தனி நாடு; ஆட்சி மொழியாக தமிழ்

kailasa 1
kailasa 1

இலத்தீன் அமெரிக்காவின் ஈக்வடோரில் உள்ள தீவை பரமஹம்ச நித்யானந்த விலைக்கு வாங்கி கைலாசா எனும் புதிய நாட்டினை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைலாசா என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த தீவிற்கு தனிக்கொடி, தனி சின்னத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தகவலை நித்தியானந்தாவின் ஆசிரமத்தினர் நடத்தி வரும் வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளனர்.

நித்யானந்தா தனது யூடியூப் சேனலில் நேற்றுமுன்தினம் மாலை நேரலையில் ட்ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு அருகிலுள்ள ஒரு தீவில் இருந்து சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

நித்தியானந்தாவின் கடவுச்சீட்டு காலாவதியான போதிலும், எவ்வாறு அவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் தனது தீவிற்கென சொந்தக் கொடி அமைத்து அதற்கு ரிஷப துவஜா என்று பெயரிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடவுச்சீட்டில் இமயமலையில் நந்தியுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற சின்னம் உருவாக்கப்பட்டு, அதில் இது ஒரு இந்து நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை இழந்து உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்ட எல்லைகள் இல்லாத நாடு என்று அந்நாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நாட்டில் கோவில் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, மூன்றாம் கண்ணுக்கு பின்னால் உள்ள அறிவியல், யோகா, தியானம், குருகுலக் கல்விமுறை, உலகளாவிய இலவச சுகாதார அமைப்பு, இலவசக் கல்வி, இலவச உணவு மற்றும் அனைவருக்கும் கோவில் சார்ந்த வாழ்க்கை முறை வழங்கப்படும் என்று ஆசிரம வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் அலுவல மொழிகளாக ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு தனித்தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என்றும், ஒரு பகுதியோ அல்லது இடமோ தனி நாடாக உருவாக வேண்டுமெனில் அதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைலசா நாடு குறித்து நித்யானந்தா வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், கைலாசத்திற்கு தனி நாடு அந்தஸ்து பெற்றுக்கொள்வதற்கு ஐநாவை நாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.