சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்

117201333 maid 1 1
117201333 maid 1 1

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த இச்சம்பவத்தின் முழு விவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.

காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.

உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அக்காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாக சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.