எக்குவடோரிய கினியில் வெடி விபத்தால் 20 பேர் பலி, 600 பேர் காயம்

Ev5RgyhWEAE3Z3l
Ev5RgyhWEAE3Z3l

மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரிய கினியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தொடர்ச்சியான வெடி விபத்துக்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் 600 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுயெமா தெரிவித்தார்.

பட்டாவில் உள்ள மொன்டோங் நுவாண்டோமாவின் அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாம்களில் “டைனமைட்டை அலட்சியமாக கையாளுதல்” காரணமாகவே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

“வெடிப்பின் தாக்கம் பட்டாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கட்டிடங்களிலும் சேதத்தை ஏற்படுத்தியது” என்று ஜனாதிபதி ஒரு அறிக்கையில் கூறினார்.

அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், சரமாரியாக ஒரு ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிக அளவு வெடிமருந்துகள் வெடித்தன. தற்காலிக இறப்பு எண்ணிக்கை 20 என்று கூறியதுடன் வெடிப்புகளுக்கான காரணம் முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

முன்னதாக, சுகாதார அமைச்சகம் 17 பேர் கொல்லப்பட்டதாக ட்வீட் செய்திருந்தது.

கேமரூனுக்கு தெற்கே அமைந்துள்ள 1.3 மில்லியன் மக்களைக் கொண்ட மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரியல் கினியா, 1968 இல் சுதந்திரம் பெறும் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது. பாட்டாவில் சுமார் 175,000 மக்கள் தற்சமயம் உள்ளனர்.