மகாராஷ்டிராவில் மதுபான கடைகள் மூடல்!சானிடைஸரை குடித்த மூவர் பலி!

handsanitiser 1594795925
handsanitiser 1594795925

லாக்டெளனில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் கை சுத்தப்படுத்த பயன்படும் சானிடைஸரை குடித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிரா முழுக்க பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பயன்பாட்டு கடைகள் தவிர்த்து மதுபானக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஒன்றாம் தேதி வரை அமலில் இருக்கும். இத்தடையால் மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மிகவும் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள வானி என்ற கிராமத்தை சேர்ந்த தத்தாவும் அவரது நண்பர்கள் 2 பேரும் எங்காவது மது கிடைக்குமா என்று தேடி அலைந்திருக்கின்றனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்று எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினர். மது குடிக்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. அப்போதுதான் அவர்களுக்கு கையை சுத்தப்படுத்த பயன்படும் சானிடைஸரில் குறிப்பிடத்தக்க அளவு ஆல்ஹகால் கலந்து இருப்பது அவர்களின் நினைவுக்கு வந்தது. உடனே மூன்று பேரும் தலா ஒரு பாட்டில் சானிடைஸரை வாங்கி குடித்துவிட்டனர். அவர்கள் குடித்த சிறிது நேரத்தில் வயிறு மற்றும் வாய் எரிய ஆரம்பித்து. தலைசுற்றல் மற்றும் வாந்தியும் ஏற்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்கள். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது மிகவும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மருத்துவமனையில் கூட்டம் கூடக்கூடாது என்று கூறி உறவினர்களை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி படிகர் கூறுகையில், “ஆரம்பக்கட்ட விசாரணையில் மது கிடைக்காமல் மூன்று பேரும் கை சுத்தப்படுத்த பயன்படும் சானிடைஸரை குடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பு மதுபானக்கடைகள் வீட்டிற்கு டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் வேகம் அதிகரித்ததால் முற்றிலும் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.